ஆந்திரா மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டித்தர தமிழகத்தைச் சேர்ந்த ஜவ்வாதுமலையில் உள்ள பழங்குடியின மக்களிடம் அதிக கூலி ஆசைக்காட்டி புரோக்கர்கள் ஆந்திரா வனத்துக்கு அழைத்து செல்கின்றனர். இப்படி அழைத்து செல்பவர்களில் பலரும் ஆந்திரா போலிஸாரிடம் சிக்கி திருப்பதி, சித்தூர், கடப்பா சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை திருப்பதி வழியாக செம்மரம் வெட்டி கடத்த தயாராக வைத்திருந்ததாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் இருவரை திருப்பதி போலிஸார் கைது செய்துள்ளனர். அதோடுமட்டுமில்லாமல் அவர்களிடமிருந்து 9 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
இவர்களை அனுப்பியது யார், உதவி செய்தது யார் என விசாரணை நடத்திய போலிஸார், மேஸ்திரிகள்தான் (புரோக்கர்கள்) மலைப்பகுதிகளில் இருந்து மரம் வெட்ட அதிக கூலி ஆசைக்கட்டி அழைத்து வருவார்கள் என்றார்கள். இன்னும் வேறு யாராவது வனத்தில் உள்ளார்களா எனவும் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர் போலிஸார்.