



மதுரையில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், நேற்று நடைபெற்றது. புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவென்பதால், பலரும் ஆர்வமுடன் பங்கேற்றிருந்தனர். இந்த கூட்டத்தில், தமிழக பாஜகவின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.
இந்த கூடத்தில், தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ.விநாயகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தமிழக முழுவதும் இருந்து பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும், அழகர்கோயில் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு, போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு பாஜகவினர் மாநகராட்சியில் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகராட்சி ஊழியர்கள், பாஜகவின் ப்ளக்ஸ், பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதைக் கண்ட பாஜகவினர், வேகமாக ஓடிவந்து மாநகராட்சி ஊழியரை கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, அங்கு வந்த போலீசார், பாஜகவினரை சமாதனம் செய்து, மாநகராட்சி ஊழியரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இன்று மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய பாஜகவினர் 25 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.