ஊரடங்கு அறிவித்து 31 நாட்களைக் கடந்து சென்றாலும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறை அறிவித்து ஊழியர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் இருக்க, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஓய்வறியாமல் தன்னலம் கானாமல் பணிசெய்து வந்தாலும் இதுபோல் நெருக்கடியான பேரிடர் காலங்களில் காவல் துறையில் போதுமான பணியாளர்கள் இல்லாமல் தொடர்ச்சியாகப் பணிச்சுமை ஏற்றபட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்ற தகவல் வர, நாம் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.

தமிழகத்தில் மொத்த காவல் நிலையங்கள் 1,432. அதில், மகளிர் காவல் நிலையஙகள் 198. தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 1,21,215 பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் ஐ.ஜி தலைமையில் இயங்குகின்றன.

தமிழகத்தில் உள்ள 7 பெரிய நகரங்களான சென்னை, திருப்பூர், மதுரை, கோயமுத்தூர், திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் தலைமையில் இயங்குகின்றது.
தமிழகம் 33 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் நகர் காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் துணைக் காவல் ஆய்வாளர், உதவியாளர் மற்றும் காவலர்கள் பணிபுரிகிறார்கள். தவிர காவலர்களில் எழுத்தர்களும் வண்டி ஓட்டுநர்களும் உள்ளனர்.

மதுரையைப் பொறுத்தவரை நகரில் 31 காவல் நிலையங்களும் புறநகரில் 47 காவல் நிலையங்கள் மற்றும் 8 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. மொத்த காவலர்கள் 4500-க்கு மேல் உள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டுதான் 6 லட்சம் பேரை கட்டுப்படுத்தவேண்டும். அதுவும் இதுபோல் எதிர்பாராத பேரிடர் காலங்களில் கொஞ்சம் சிரமம்தான்.

மதுரையில் ஒவ்வொரு காவலருக்கும் 6 மணிநேரத்திற்கு ஒரு ஷிப்ட் முறை என்றாலும், நடைமுறையில் அப்படி இல்லை. உயர் அதிகாரிகள் சொல்லும் போது ஒன்றும் செய்ய முடியாது. அதுவும் பெண்கள் பாடு ரொம்ப கஷ்டம் அவசரத்திற்கு இயற்கை உபாதைகளுக்குக் கூடச் செல்லமுடியாது.
மக்கள் போலிஸை எதிரியாகப் பார்க்க ஆரம்பித்துள்ளனர். வண்டிகளில் வருபவர்களைப் பிடித்து அபராதம் வசூலிக்கச் சொல்கிறார்கள் இந்த ஊரடங்கில் யார் கையில் காசு இருக்கும். அவர்கள் எங்கள் மீது வெறுப்பாகிறார்கள். இது அரசுக்குத்தான் பாதகமாகப் போகும். மருத்துவமனையிலும் ஒவ்வொரு செக்போஸ்டிலும் 5 பேர்களுக்கு குறையாமல் இருக்கவேண்டும். மதுரையைச் சுற்றி 200-க்கும் மேற்பட்ட செக்போஸ்ட் இருக்கு. அதுபோக அமைச்சர்கள் விசிட், ஆட்சியர், ஆணையாளர் மற்றும் முக்கிய வி.ஐ.பி-களுக்கு என்று தொடர்ச்சியாக டூட்டி பார்க்கச் சொல்கிறார்கள். மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கரோனா தடுப்பு முகக் கவசங்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கு. ஆனால் காவலர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இருக்கா? என காவல்துறையில் பணியாற்றும் சிலர் நம்மிடம் தங்களது மனக் கஷ்டத்தை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரை காவலர் ஒருவர், ‘’அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகவே இல்லை. மதுரை ஆணையாளரோ பதவி உயர்வு பெற்று பொறுப்பு ஆணையராகத் தொடர்கிறார். அவர் ஏற்கனவே சென்னைக்கு மாற்றல் கேட்பதாகச் சொல்கிறார்கள்.
இப்ப பாருங்க காவலருக்கும் கரோனோ பரவல் அதிகமாகிகொண்டே போகிறது. மக்களிடமும் கரோனா பாதித்த மருத்துவமனை வார்டுகளிலும் எந்த வித பாதுகாப்பும் அதிகம் இல்லாமல் பணிபுரிகிறோம். விடுமுறை இல்லை. பரவாயில்லை. ஆனால் ஷிப்ட் முறை என்று சொல்லிவிட்டு வீட்டிற்கே அனுப்பாமல் தொடர்ச்சியாக வேலை வாங்குவது மன உளைச்சலுக்கு தள்ளப்படுகிறோம். மருத்துவர்களை, செவிலியர்களை, தூய்மைப் பணியாளர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படும் அரசும், ஊடகங்களும், மக்களும் வீடு, மனைவி, மக்கள் மற்றும் எங்கள் உயிர் என அனைத்தையும் அர்ப்பணித்து மனசுக்கும் உடலுக்கும் ஓய்வே இல்லாமல் மிகுந்த மன உளைச்சலோடு உழைக்கும் எங்களையும் கண் திறந்து பார்க்கவேண்டும். நாங்களும் மனுசங்கதானே? இதற்கு விடிவே இல்லையா’’ என்று கேட்கிறார்.