மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் பகுதியில் விசாகா பெண்கள் தங்கும் விடுதி என்ற பெயரில் தனியார் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதியில் உள்ள பிரிட்ஜ் இன்று (12.09.2024) அதிகாலை 4 மணியளவில் திடீரென்று வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு த்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தது, விடுதியில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தி விடுதியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மீட்டனர். மேலும் இந்த விபத்தின் போது பிரிட்ஜ் அருகில் இருந்த பரிமளா செளந்தரி மற்றும் சரண்யா ஆகிய இருவரையும் பலத்த காயங்களுடன் தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரிமளா செளந்தரி மற்றும் சரண்யா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விடுதி உரிமையாளர் இன்பாவை மதுரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 100 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் இயங்கி வந்த விசாகா பெண்கள் விடுதி, மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறவில்லை. கட்டடம் சேதமடைந்து இருப்பதால் விடுதியை காலி செய்யுமாறு இடத்தின் உரிமையாளர் கூறியும், வெளியேற மறுத்துள்ளார். மருத்துவமனை நடத்த அனுமதி பெற்றுவிட்டு மகளிர் விடுதியை நடத்தி வந்ததால், விடுதியின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் கட்டடத்தின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்திருந்தார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த 2023ஆம் ஆண்டே விடுதியை இடித்து அப்புறப்படுத்த மதுரை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. ஆனால், விடுதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் விடுதி இடிக்கப்படாமல் உள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது என்று தெரியவந்தது. இதனையடுத்து விடுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று அனுமதி பெற்று விடுதியை இடிக்க திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. அதே சமயம் விடுதிக் கட்டடம் முழுமையான அனுமதி பெறாமலும், பாதுகாப்பு வசதிகள் இல்லாமலும் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பெண்கள் விடுதிக் கட்டடத்தை நாளைக்குள் இடிக்க கட்டடத்தின் உரிமையாளர்களுக்கு மதுரை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் எடுத்து வருகின்றனர்.