39 எம்.பி.க்கள் என்ன செய்கிறார்கள் பார்க்கலாம் என்று அதிமுக கூட்டணிக் கட்சிகள் கேலி பேசின. ஆனால், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒரு எம்.பி. என்ற வகையில் மக்கள் நலனுக்கு எத்தகைய பணியாற்ற முடியும் என்பதை இந்த முறை மக்களவைக்கு அனுப்பிய எம்.பி.க்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் சத்தமில்லாமல் சில மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறார்.
முதலாவதாக, மதுரை-பழனி-கோவை வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற மதுரை மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ரயில்வே நிர்வாகத்துடன் பேசி, தீபாவளி பரிசாக அந்த ரயில் இயக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, மதுரை ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்றவுடன் வெளியே வரும் பயணிகளை ஏற்றிச்செல்ல வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், சு.வெங்கடேசனின் முயற்சியால் ஒரு வாகனம் 6 நிமிடங்கள் ரயில்வே வளாகத்திற்குள் சென்று வர அனுமதி கிடைத்துள்ளது.
மூன்றாவதாக, மதுரை ரயில் நிலைய முகப்பில் சேம்பர் ஆப் காமர்ஸ் முயற்சியால் அமைக்கப்பட்ட மீன் சின்னத்தை ரயில்வே நிர்வாகம் அகற்றியது. இப்போது, விரைவில் அந்த சின்னத்தை முகப்பில் வைக்க நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது.
நான்காவதாக, ரயில் நிலையத்தில் மெடிகல் ஷாப், பிளாட்பாரம் டிக்கட் கவுண்ட்டர் ஆகியவை புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
இவைதவிர, சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் தேஜஸ் விரைவு ரயிலின் பெயரை மதுரை தமிழ்சங்க ரயில் என்று பெயர் மாற்றுவது உட்பட 14 கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறியிருக்கிறார்.