மதுரை நத்தம் சாலையில் மதுரை - செட்டிகுளம் இடையே 7.3 கிலோமீட்டர் தொலைவில், 694 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேம்பாலம் கட்டப்பட்டுவருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி ஒரு தூணில் இருந்து மற்றொரு தூணை இணைக்கும் மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் (45) என்ற தொழிலாளி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திவந்த திருச்சி என்.ஐ.டி. மற்றும் நெடுஞ்சாலை குழுவினர் விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்திருந்தனர். பளுதூக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக அந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கட்டுமான நிறுவனமான ஜே.எம்.சி. நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமான ஆலோசனை நிறுவனத்திற்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் 80 சதவிகித கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.