திருச்சி துவாக்குடி அருகே உள்ள பரக்கத் நகரைச் சேர்ந்தவர் நூர்ஜகான்(70). இவர் அப்பகுதியில் உள்ள சாலையைக் கடக்க முயன்ற போது, அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று நூர்ஜகானை மோதியதில் படுகாயமடைந்து கீழே விழுந்துள்ளார். ஆனாலும் நூர்ஜகானை மோதிய கார், நிற்காமல் சென்றது.
இந்த நிலையில் மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, மயிலாடுதுறையிலிருந்து திருச்சி வழியாகத் திருநெல்வேலிக்குச் செல்வதற்காகக் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது துவாக்குடி பேருந்து நிறுத்தம் அருகே மக்கள் கூட்டமாக நின்றதைக் கவனித்த துரை வைகோ, காரை ஓரமாக நிறுத்திவிட்டு மக்கள் கூட்டத்தை நோக்கிச் சென்று பார்த்தபோது, நூர்ஜகான் படுகாயத்துடன் சாலையில் கிடந்துள்ளார். உடனே தன்னுடன் வந்த மதிமுக நிர்வாகிகளை அழைத்து 108 ஆம்புலன்ஸ்குக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸில் ஏற்றி நூர்ஜகானை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு துரை வைகோ அங்கிருந்து சென்றார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நூர்ஜகான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே நூர்ஜகானை மோதிய காரை துவாக்குடி அண்ணா வளைவு பகுதி அருகே போலீசார் மடக்கிப் பிடித்து காரை ஓட்டி வந்த அன்புச்செல்வனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.