அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா அலுவலகம் எதிரில் பிரபு என்பவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இவரது மையத்தில் பொதுமக்கள் வருமானம், இருப்பிடம், மின் கட்டணம், நில அளவை செய்ய கட்டணம் இப்படி பல்வேறு விதமான பணிகளைப் பொதுமக்களுக்கு செய்து கொடுத்து வந்துள்ளார். இவரிடம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணம் செலுத்தி தங்கள் சான்றிதழ்களைப் பெறும் பொதுமக்களுக்கு போலியான ரசீதுகளைக் கொடுத்து ஏமாற்றியுள்ளார்.
இவர் அளித்த ரசீதுகள் மீது சந்தேகம் அடைந்த வட்டாட்சியர் பாக்கியம், தாலுகா அலுவலக கணக்கு இருப்பை ஆன்லைனில் சரி பார்த்தபோது, அதில் 50 ஆயிரம் ரூபாய் குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆராய்ந்த போது அதற்கான தொகையை பிரபு பொதுமக்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு போலியான ரசீது கொடுத்து ஏமாற்றியுள்ளார் என்பதைக் கண்டறிந்தனர்.
இதுகுறித்து உடனடியாக செந்துறை கிராம நிர்வாக அலுவலர் வாழவந்தான் செந்துறை காவல் நிலையத்தில் பிரபு மீது புகார் அளித்ததோடு பிரபுவின் இ-சேவை மையத்தையும் பூட்டி சீல் வைத்தனர். அரசு பணத்தை மோசடி செய்த இ-சேவை மைய பொறுப்பாளர் பிரபுவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.