தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தப் போது நேற்று (14.07.2024) அதிகாலையில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதற்கிடையே இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அதோடு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.
இத்தகைய சூழலில் மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் நாம் தமிழர் கட்சியில் மதுரை மாவட்ட வடக்கு தொகுதி துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் இவர் வழக்கம் போல் இன்று அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாலசுப்பிரமணியம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.