
மதுரையில் ஆரப்பாளையம் முதல் விரகனூர் அணை வரை வைகை ஆற்றின் இரு கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் முழுமையாக அகற்ற உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் " தேனி மாவட்டத்தில் தொடங்கும் வைகை ஆறு தேனி,திண்டுக்கல்,மதுரை,சிவகங்கை, இராமநாதபுரம் என 5 மாவட்டகளுக்கு விவசாயத்திற்கு குடிநீருக்கும் பயன்பெற்று வருகின்றது. 257 கிலோ மீட்டர் தூரம் செல்லும் வைகை ஆற்றில் மதுரையின் ஆரப்பாளையம் பகுதியிலிருந்து வீரகனூர் வரையில் மட்டும் 452 இடங்களில் கழிவுநீர் நேரடியாக கலக்கின்றது.
இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மதுரை ஆரப்பாளையம் முதல் விரகனூர் அணை வரையிலும் வைகை ஆற்றின் இருபுற கரைகளிலும் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் இரு கரைகளிலும் இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.இந்த ஆக்கிரமிப்பினால் வைகை ஆற்றின் அளவு குறைந்து கொண்டே வருகின்றது. இதேநிலை நீடித்தால் எதிர் வரும் காலங்களில் வைகை ஆறு இல்லாமல் போய்விடும் நிலை ஏற்படும். இதனால் ஆரப்பாளையம் முதல் விரகனூர் அணைக்கட்டு பகுதி வரை ஆற்றின் இரு கரைகளிலும் முறையாக அளவிட்டு ஆக்கிரமிப்புகளை ஆகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்று ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கலப்பதை தடுத்தும்,வைகை ஆற்றை தூய்மைபடுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி முரளிதரன், நீதிபதி கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசாரணை வந்தபோது" அரசு தரப்பு வழக்கறிஞர் வைகை ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக 2017 ஆம் ஆண்டு மனுதாரர் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளநிலையில் தற்போது மீண்டும் ஒரு மனுவை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார் என கூறினார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் 2017 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதனையும், மதுரையில் வைகை ஆற்றின் இருகரைகளில் ஆரப்பாளையம் முதல் விரகனூர் அணை வரை மதுரை மாவட்ட ஆட்சியர்,மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி,ஆக்கிரமிப்பு அகற்றியது குறித்து ஜூன் 8 ஆம் தேதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மதுரை ஆட்சியர்,மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்து வழக்கு விசாரணையை ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.