அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். அந்த பள்ளிக் கூடத்தின் அருகிலேயே உள்ள விடுதியில் அவர் தங்கியிருந்தார். கடந்த ஜனவரி 9- ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், ஜனவரி 19- ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு சென்ற பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர், மாணவியின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர். அதைத் தொடர்ந்து, மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். அத்துடன், ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "மாணவியின் குடும்பத்திற்கு உண்மையான நீதி கிடைக்கும் வரை பா.ஜ.க. போராடும். பா.ஜ.க.வின் போராட்டம் எந்த மதத்திற்கும் எதிரான போராட்டம் இல்லை. நீதி வேண்டும்; நியாயம் வேண்டும். பா.ஜ.க. எப்போதும் அரசியல் ஆதாயம் தேடாது" எனத் தெரிவித்தார்.
மாணவியின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும்; இதில் முதல் தவணையாக பா.ஜ.க. 10 லட்சம் ரூபாய் வழங்கும்; மீதத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அண்ணாமலை முன்பே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.