திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற பிரச்சனையில் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் பேரூராட்சி தலைவருக்கும் திமுக பேரூர் செயலாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி சாதாரண கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அப்போது குறுக்கிட்ட கவுன்சிலரும் திமுக பேரூர் செயலாளருமான விஜி என்ற விஜயகுமார், பேரூராட்சி வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி வருகிறது. வரும் நிதிகளை திட்டப் பணிகளாகப் பிரிப்பது தொடர்பாக யாரை கேட்டு முடிவு எடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த தலைவர் செல்வராஜ், 'நீ வேண்டுமானால் தலைவராக இருந்து கொள். நான் எழுதித் தருகிறேன்' என்று ஆவேசமாக பேச, இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் இருவரும் ஒருமையில் பேசிக்கொள்ள, பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் இருவரும் சமாதானம் அடைந்து பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றினர். பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பேரூராட்சி பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற போட்டி தற்போது பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் வெடித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.