மதுரை மாவட்டம் -திருமங்கலம் - கப்பலூர் டாஸ்மாக் கிட்டங்கியில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 53 ஆயிரம் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். டாஸ்மாக் மேலாளர் அமுதனிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் டாஸ்மாக் கிட்டங்கி அமைந்துள்ளது. இன்று மதியம் 3 மணி அளவில் விற்பனையாளர்களுக்கான கூட்டம் டாஸ்மாக் கிட்டங்கி மேலாளர் அமுதன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் விற்பனை கண்காணிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் இக் கூடத்தில் கலந்து கொண்டனர். அப்போது பணப் பரிவர்த்தனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் காவல் ஆய்வாளர் குமரகுரு மற்றும் போலீசார் திடீரென கிட்டங்கியில் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கிட்டங்கி மேலாளர் அமுதனிடம் ரூபாய் 53 ஆயிரம் கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் டாஸ்மாக் கிட்டங்கி பணியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.