நக்கீரன் ஆசிரியர் கைது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நக்கீரன் பத்திரிக்கை இதழின் ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் கோபால் அவர்களை தேச துரோக சட்டத்தின் கீழ் சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கைது நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணை குறித்த செய்திக் கட்டுரையில் வெளியான தகவல் தவறானவை என, ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கைது பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரான முட்டுக்கட்டையாகும். அதேபோல் அவர் கைது செய்யப்பட்ட விதமும் ஒரு சர்வாதிகார ஆணவப் போக்குடன் நிகழ்த்தப்பட்ட கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான, கருத்துரிமைக்கு எதிரான அத்துமீறல் நடவடிக்கையாகும்.
சமீப காலமாக அரசின் திட்டங்களுக்கு எதிராக பேசுபவர்களையும், எழுதுபவர்களையும், போராடுபவர்களையும் இதுபோன்று விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்து அவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்வது என்பது வாடிக்கையாகி வருகின்றது. அந்த வரிசையில் தற்போது நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். இது கருத்துரிமைக்கும், எழுத்துரிமைக்கும் விடுக்கப்பட்ட சவாலாகும்.
இந்த கைது நடவடிக்கையானது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் விதத்திலும், நீதிமன்றங்களை அவமதித்தும், காவல்துறையை மிக மோசமாக விமர்சித்தும் வருகின்ற பாஜகவின் எச்.ராஜா மீதோ, பெண் பத்திரிக்கையாளர்களை மிக மோசமாக விமர்சித்த பாஜகவின் எஸ்.வி.சேகர் மீதோ மேற்கொள்ளப்படவில்லை. இவர்கள் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்களுக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் இருந்தும் அவர்கள் இன்றும் போலீஸ் பாதுகாப்புடன் சுதந்திரமாக வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
சட்டதின் முன் அனைவரும் சமம் என்கிற போது சிலரை சிலரின் அறிவுறுத்தல் காரணமாக பாதுகாக்கும் தமிழக காவல்துறை, சமூக அவலங்களையும், ஆட்சியாளர்களின் ஊழல் முறைகேடுகளையும், மேல்மட்ட அதிகார வர்க்கத்தினரின் சட்டவிரோத செயல்களையும் அம்பல்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகங்களையும், பத்திரிக்கையாளர்களையும் நசுக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பேசினால் கைது, போராடினால் கைது, எழுதினால் கைது என்பது சர்வாதிகாரத்தின் உச்சமாகும்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் வெளியான முதல் ஆடியோவிலிருந்து அவரது வாக்குமூலம் வரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் தொடர்பு குறித்து தெளிவான ஆதாரங்களை கொண்டு நக்கீரன் அம்பலப்படுத்தி வரும் நிலையில், அந்த விவகாரத்தை இரண்டு பேராசிரியர்களுடன் முடித்துவிட சதி செய்யப்பட்டு வருகிறது. இதனாலேயே நக்கீரன் பத்திரிக்கையை முடக்குகின்ற வகையிலும், மேற்கொண்டு இந்த விவகாரத்தை யாரும் எழுப்பக்கூடாது என்கிற மிரட்டல் அடிப்படையிலும், நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆகவே, நிர்மலா தேவி விவகாரத்தில் தொடர்ந்து எவ்வித அதிகார தலையீடுமின்றி நேர்மையான விசாரணை நடைபெற வேண்டுமெனில் தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையீட்டின் பேரில் நக்கீரன் கோபால் அவர்கள் மீது பொய்யாக போடப்பட்டுள்ள தேச துரோக வழக்கை உடனடியாக வாபஸ் பெற்று, உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும், தொடரும் ஆளுநர், தமிழக காவல்துறையின் தொடரும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் எழுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.