சமூகப்பணி கல்லூரியின் 70 ஆண்டு சிறப்பு விழாக் கொண்டாட்டம் மற்றும் சமூகநீதி மற்றும் சமத்துவ மையம் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது.
சென்னையில் உள்ள சமூகப் பணி கல்லூரியானது, 1952- ல் தென்னிந்தியாவில் முதன்முறையாக சமூகப் பணிக்காக தொடங்கப்பட்ட கல்வி நிலையம். சமூகப் பணி, மனித வள மேலாண்மை, உளவியல், வளர்ச்சியியல், சமூகத் தொழில்முனைவு மற்றும் சமூக ஆராய்ச்சித் துறையில் உயர்தர கல்வியை 70 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறது. தொடங்கப்பட்டது முதலே, சமூகத்தில் பின்தங்கிய, விளிம்பு நிலை மக்களுக்களிடையே களப்பணி மற்றும் பல்வேறு விதமான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
2023-ஆம் கல்வியாண்டில், இக்கல்லூரியின் 70 ஆண்டுகால பாரம்பரியத்தை நினைவுகூறும் விதமாக பவள விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் ஒரு பகுதியாக ‘தி விஸ்டம் ட்ரீ’ (The Wisdom Tree) என்ற புத்தகத்தை தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் அமைச்சர் பெ.கீதா ஜீவன் வெளியிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் பெற்றுக் கொண்டார். செல்லம் கலாலயம் குழுவினரின் ‘சமூக நீதி மற்றும் சமத்துவம்’ பற்றி ‘சமன்’ என்ற விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை இயக்குநர் ஆனந்த், மற்றும் செயலர் க.லட்சுமி பிரியா ஆகியோர் கலந்து கொண்டார். மேலும், மையத்தின் இயக்குநர் முனைவர். பவனந்தி வேம்புலு சமூக நீதி நாளின் உறுதி மொழியை வாசிக்க கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து உறுதி மொழியை ஏற்றனர். இவ்விழாவில், கல்லூரியின் தலைவர் கே.ஏ.மேத்யூ இ.ஆ.ப (ஓய்வு), செயலாளர் முத்துகுமார் தானு, முதல்வர் முனைவர்.எஸ்.ராஜா சாமுவேல் மற்றும் நிர்வாகத் தலைவர். முனைவர்.ஆர்.சுபாஷினி, உதவி பேராசிரியர் ஆண்டனி ஸ்டீபன், சங்கரபாண்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.