மக்கள் இறைச்சிக்காக அதிகம் சாப்பிடும் உணவாக இருப்பது பிராய்லர் கோழிகள். இந்த கோழிகள் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள். தமிழகம் முழுவதும் 25,000 கோழிப்பண்ணைகள் உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான கோழிகள் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில், தங்களுக்குக் கோழி நிறுவனங்கள் வளர்ப்புக் கூலி உரிய வகையில் வழங்கவில்லை எனக் கூறி 11 ஆம் தேதியில் இருந்து கோழி வளர்ப்பில் ஈடுபடமாட்டோம் எனக் கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன் மாநிலத் தலைவர் மூர்த்தி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நம்மிடம் கூறினார். "தமிழகத்தில் 25,000 கோழிப்பண்ணைகளில் விவசாயம் சார்ந்த தொழிலாக இதைச் செய்து வருகிறோம். பண்ணைகளில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இந்தப் பண்ணைகளுக்கு ஒவ்வொரு கோழி நிறுவனங்களும், குஞ்சு மற்றும் தீவனங்களை வழங்கி வருகிறது. அதனைப் பெற்றுக்கொண்ட பண்ணையாளர்கள் 40 முதல் 50 நாட்கள் வரை கோழிகளை வளர்த்துக் கொடுக்கின்றனர். இதற்குக் கூலியாக கிலோ ஒன்றுக்கு மூன்று முதல் ஆறு ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு அந்த நிறுவனங்கள் வழங்குகின்றன.
இந்தத் தொகை முழுமையாகப் போதவில்லை என்று பலமுறை கோரிக்கைகளை வைத்தோம். சென்ற 2010 ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 4.50 விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், போடப்பட்ட ஒப்பந்தப்படி இந்தக் கோழி நிறுவனங்கள் அதை நடைமுறைப்படுத்தவில்லை. கோழி வளர்ப்புச் செலவுகள் பல மடங்கு உயர்ந்து விட்டது. இன்றளவும் கிலோ ஒன்றுக்கு ரூ 3.50 முதல் ஆறு ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறார்கள். இதனால், கோழிப்பண்ணையை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அவர்கள் வரவில்லை. இப்போது, கிலோ ஒன்றுக்கு 5 வரை மட்டுமே தர முடியும் என அவர்கள் கூறிவிட்டனர்.
நாங்கள் கேட்ட ஒரு கிலோவுக்கு 12 ரூபாயை தர முடியாது எனக் கூறிவிட்டனர். இதனால் 11ஆம் தேதி முதல் எங்கள் பண்ணைகளில் வளர்க்கும் கோழிகளை, அந்தக் கோழி நிறுவனங்களே வந்து ஆட்களை வைத்து, குஞ்சுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்து விட்டோம். எங்கள் பண்ணையில் உள்ள கோழிகளை வளர்த்துக் கொடுக்க உழைப்புக்கேற்ற ஊதியம் தான், இந்த கோழி நிறுவனங்கள் தர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என்றார்.
இவர்களின் நியாயமான போராட்டத்தால் கோழி உற்பத்தி குறையும். இதனால், கோழி நிறுவனங்கள் விலையை ஏற்றி, மக்கள் தலையில் தான் கட்டப்போகிறது. தற்போது பிராய்லர் கோழிகளின் விலை என்பது ஒரு கிலோ நூற்று ஐம்பது ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. குஞ்சு, தீவனம், வளர்ப்புக் கூலி என்று கணக்கிட்டால் முதலீடு என்பது ஐம்பது ரூபாயைத் தாண்டாது. ஆனால், இரவு, பகலாக இந்தக் கோழிகளை வளர்த்துக் கொடுக்கும் விவசாயிகளுக்கு உரிய கூலியை தராமல், அவர்களின் உழைப்பைச் சுரண்டி வருகிறார்கள்.
உழைப்பாளர்களுக்குக் குறைந்த கூலி, வாங்கும் நுகர்வோருக்கு அதிக லாபத்தில் விற்பனை. இது தானே முதலாளித்துவக் கோட்பாடு.