சபரிமலையில் சமீப காலமாக நடக்கக்கூடாத சில சம்பவங்கள் நடந்து வருவதாக கூறும் பக்தர்கள், கன்னட நடிகை ஜெயமாலா கோவில் கருவறைக்குள் சென்று ஐயப்பா சாமி விக்கிரகத்தை தொட்டு வணங்கினேன் என்று கூறி சா்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதை தொடா்ந்து அதனால் சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றபோது அதனை தடுத்து நிறுத்த பக்தா்கள் முயன்ற போது ஏற்பட்ட பல சம்பவங்கள் என சிலவற்றை கூறினர்.
தற்போது கரோனா பாதிப்பால் சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு விதிக்கபட்ட கட்டுப்பாடுகளில் பக்தா்கள் விரதம் இருந்து கொண்டு செல்லும் நெய்யை கொண்டு நெய் அபிஷேகம் செய்வது நிறுத்தப்பட்டது. மேலும் நாள் முமுக்க 24 மணி நேரமும் அணையா காட்சி தரும் ஆழி தீ அணைந்தது. இவை இரண்டும் சபரிமலை வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு நடந்துள்ளது. இதனால் பக்தா்கள் மன வருத்தம் அடைந்தியிருப்பதுடன் தேவசம் போர்டும் அதிர்ச்சியடைந்துள்ளது.
இதுகுறித்து குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த ஐயப்பா குருசாமி சிதம்பரம் கூறும்போது, 40 ஆண்டுகளாக விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்கிறேன். ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு குருசாமியாக இருந்து வழி நடத்தி சென்றியிருக்கிறேன். பக்தா் ஒருவா் விரதம் இருந்து தேங்காயில் நிரப்பும் நெய் அது வெறும் நெய் மட்டுமல்ல அந்த பக்தரின் கஷ்டம், துக்கம், நஷ்டம், நோய், வேதனை என எல்லாத்தையும் கலந்து தான் நிரப்புகிறான். அதை ஐயப்பா சாமியின் உடம்பில் ஊற்றி விட்டு கடைசியில் அதை சுமந்து சென்ற தேங்காயை ஆழி தீயில் இட்டு எறிவார்கள்.
இந்த ஆழி தீயை மண்டல மகர காலத்தில் நடை திறக்கும் அன்று கோவில் மேல் சாந்தி கற்பூரத்தால் பற்ற வைப்பார். இந்த ஆழி தீ மண்டல மகர காலம் முடிந்து நடை அடைக்கும் அன்றைய நாள் வரை அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும்.
18-ம் படிக்கு கீழே இடது பக்கத்தில் காணப்படும் ஆழிக்கும் தனியாக ஆழி பூஜை நடத்தப்படும். இதனால்தான் சரணம் கோஷத்தில் கூட ஆழிக்குடையவனே என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் ஆழி தீ அணைந்து இருப்பது அதிர்ச்சியை மட்டுமல்ல வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆழி தீ அணைந்தது குறித்து தேவசம் போர்டு அதிகாரிகள் கூறும்போது, கரோனாவால் சில கட்டுபாடுகள் விதிக்கபட்டதால் பக்தா்களின் வருகை மிக மிக குறைந்ததால் ஆழி தீயில் தேங்காய் இல்லை இதனால்தான் ஆழி தீ அணைந்தது என்றனர்.