சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (08/11/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இதே பகுதிகளில் உருவாகி, நவம்பர் 9- ஆம் தேதி முதல் நவம்பர் 11- ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.
இதன் காரணமாக, நவம்பர் 8, 9, 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். எனினும், நவம்பர் 10- ஆம் தேதி முதல் நவம்பர் 12- ஆம் தேதி வரை தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ற விரிவான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 10- ஆம் தேதி அன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மற்றும் சிவகங்கை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள புகைப்படத்தைப் பார்க்கலாம்.