
முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கை போக்சோ பிரிவுக்கு மாற்றுவது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இதுவரை 18 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுவந்தன. இந்நிலையில், சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கை போக்சோ பிரிவின்கீழ் மாற்ற சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று ஆலோசனை நடத்தி வந்தனர். 3 வழக்குகளில் இரண்டு வழக்குகள் போக்சோவில் பதிவான நிலையில், சட்ட வல்லுநர்களுடன் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்றபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சி.பி.சி.ஐ.டி தகவல் தெரிவித்திருக்கும் நிலையில், புழல் சிறையில் உள்ள அவர் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.