






தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் இன்று. அதனை கொண்டாடும் விதமாக அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினர். அதேபோல், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் சசிகலா, ஜெயலலிதாவின் பிறந்தநாளை சென்னை ராமாபுரம் தோட்டத்தில் அமைந்துள்ள காதுகேளாத மற்றும் வாய்ப்பேச முடியாத பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாடினார். இதில் சசிகலா, குழந்தைகளுக்கு மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், கலை நிகழ்சிகள், 74 பேருக்கு ரத்ததான முகாம் அகியவற்றை தொடங்கி வைத்தார். பள்ளிக் குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கி அவர்களுடன் உணவருந்தினார்.