ஈரோடு அருகே உள்ள திண்டல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கட்டிட தொழிலாளி ஆவார். பில்டிங் கட்டுமான பணிக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வேலை பார்ப்பது இவரது வழக்கம். அப்போது காஞ்சி கோவிலைச் சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுடன் பேருந்தில் சென்று வரும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள தனியார் குழந்தைகள் பள்ளியில் நந்தினி ஆசிரியையாக வேலை பார்க்கிறார். இவர்களின் பழக்கம் காதலாக மாறி, இருவரும் ஒன்றரை வருடமாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதல் விவகாரம் அவரவர் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அப்போது நந்தினி வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கூலி வேலைக்கு செல்பவன் எப்படி குடும்பம் நடத்த முடியும்? என கேள்வி எழுப்ப, கூலி வேலை செய்பவன் தான் என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பான் என நந்தினி காதலில் உறுதியாக இருந்துள்ளார். வேறு வழி இல்லாமல் காதல் ஜோடி தங்களது வீட்டை விட்டு வெளியேறி கடந்த 9ஆம் தேதி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் காதல் ஜோடி உயிருக்கு பயந்து நண்பர்கள் வீட்டில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரகாஷ் குடும்பத்தினரை பெண் வீட்டார், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து புதுமண காதல் ஜோடி இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு, அவர்களின் உறவினருடன் வந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். உயிருக்கு பயந்து காவல் நிலையம் வந்த காதல் ஜோடி குடும்பத்தினருடன் சமரசம் பேசும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறன்றனர்.