கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஊமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், கோத்தகிரி சாலை மலையடிவாரத்தில் உள்ள கருப்பராயன் கோயிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஊமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் மற்றும் அவரின் அண்ணன் முத்துக்குமாருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. ஏற்கனவே நந்தகுமார், முத்துக்குமார் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு, மேட்டுப்பாளையம் போலீஸாருக்கு மாரியப்பன் தகவலளித்து இருவரும் சிறைக்குச் சென்றிருந்தார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் நேற்று ஓடந்துறை டாஸ்மாக் முன்பு நின்று மாரியப்பனை தனது நண்பரான சந்தோஷ் குமார் என்பவருடன் சேர்ந்து நந்தகுமார், முத்துக்குமார் இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் போலீஸில் மாட்டிவிட்டதால் தங்களுக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டமாகி விட்டது, அந்தப் பணத்தைக் கொடு இல்லையென்றால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். மேலும்,சந்தோஷ் குமார் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கழுத்தை அறுத்தால் தான் பணத்தைக் கொடுப்பான் என மிரட்டியுள்ளார்.
சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வந்தவுடன் மாரியப்பன் அங்கிருந்து தப்பி, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர்கள் தாமோதரன், காவலர்களுடன் விரைந்து சென்று மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். சிறையிலடைக்கப்பட்ட மூவர் மீதும் திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.