நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த குருசாமி பாளையத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (25). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறை எடுத்துக்கொண்டு பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பைக்கில் தனது ஊருக்கு வந்துகொண்டிருந்தார் பிரவீன் குமார். நேற்று அதிகாலை 3 மணி அளவில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலை வழியே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது விழுப்புரம் நோக்கி எதிரே வந்து கொண்டிருந்தது ஏசர் சரக்கு லாரி. அந்த லாரி வலது பக்கமாக வந்து பிரவீன் ஓட்டி வந்த பைக் மீது மோதியதில் பிரவீன்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியின் சக்கரத்தில் சிக்கிய பைக், சிறுது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. அதில் ஏற்பட்ட தீப்பொறியினால் லாரியின் அடியில் சிக்கிய பைக் தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்டு பயந்துபோன டிரைவர், லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். அப்போது லாரியின் நான்கு டயர்களும் தீப்பிடித்து எரிந்தன.
அதே நேரத்தில் கோவையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அரசு விரைவு பஸ், எரிந்து கொண்டிருந்த லாரி மீது மோதியது. இருப்பினும் பஸ் டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு பஸ்சை ஓரம்கட்டி நிறுத்தியதால், அதில் பயணம் செய்த பயணிகள் உயிர் தப்பினார்கள். இதையடுத்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பிரவீன் குமாரின் பைக் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். பைக் - லாரி - பஸ் அடுத்தடுத்து மோதல் சம்பவம் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.