தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாகக் கடந்த வாரம் நடைபெற்றது. ஒரு லட்சம் பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதுவரை 50 சதவீத வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளது. இதில் திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
140 மாவட்ட கவுன்சிலர்களில் திமுக 90 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 323 இடங்களில் அதிமுக 47 இடங்களிலும் முன்னணியிலிருந்து வருகிறது. இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேட்சையாக 150க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டனர். இதில் 57 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினராக தேர்வாகியுள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இது அடுத்த நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.