19 வார்டுகளைக் கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தின் அதிக வருமானம் கொண்டது கோவில்பட்டி யூனியன். இங்கே தி.மு.க. 8 அதன் கூட்டணி ஒன்றுடன் 9 வார்டுகளைக் கைப்பற்ற அ.தி.மு.க. 5 வார்டு அதன் கூட்டணிக் கட்சி 1 வார்டு, சுயேட்சைகள் 4 வார்டுகளில் வென்றனர்.
யூனியன் தலைவருக்கான தேர்தல், ஆரம்பத்தில் தேர்தல் அலுவலரின் உடல் நலக்குறைவால் நிறுத்தபட்டு, பின்பு ஜன 30ல் நடந்த மறைமுகத் தேர்தலில் அ.தி.மு.க.வின் கஸ்தூரி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று யூனியன் தலைவியானார். அப்போதே இந்த அறிவிப்பு முறைகேடானது என்று கூறி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த தொகுதி எம்.பி.யான கனிமொழியும் சாலைமறியலில் ஈடுபட்டார்.
![local body election thoothukudi admk candidate win](http://image.nakkheeran.in/cdn/farfuture/4nt7xMVEUwu6Pqpl-RydQ_Qi0pRC3J35Bz6qTc1Ym_s/1583399854/sites/default/files/inline-images/palanisamy8888.jpg)
தற்போது பிப். 4 அன்று துணைத்தலைவர் தேர்தல் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் நடந்தது. ஆரம்பத்தில் அ.தி.மு.க.வின் ஆதரவு கவுன்சிலர் உட்பட 11 பேர் வந்தனர். தி.மு.க. தரப்பிலோ 8 கவுன்சிலர்கள் வந்தனர். தேர்தல் அலுவலராக உமா சங்கர் நியமிக்கப்பட்டார் தேர்தல் நடத்தும் போது வழக்கப்படி கதவுகளை மூடிவிட்டு தேர்தல் நடத்துமாறு தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை ஏற்ற அதிகாரிகள் பூட்டப்பட்டு தேர்தலை நடத்தினர்.
![local body election thoothukudi admk candidate win](http://image.nakkheeran.in/cdn/farfuture/lke4gmYmQlt2sXPu6kcBX_k8DKbWt2jCpXOnHLupdVw/1583399885/sites/default/files/inline-images/palanisamy9999.jpg)
துணைத்தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் 5- வது வார்டு கவுன்சிலர் சுந்தரேஸ்வரியும் அ.தி.மு.க. சார்பில் 13- வது வார்டு கவுன்சிலர் பழனிசாமியும் போட்டியிட்டனர். இதில் பழனிசாமிக்கு 10 வாக்குகளும், சுந்தரேஸ்வரிக்கு 9 வாக்குகளும் கிடைத்தன. பின்னர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வின் பழனிசாமி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.
![local body election thoothukudi admk candidate win](http://image.nakkheeran.in/cdn/farfuture/zsb2sPzDdRIv1JYhX-6OqkeoH--xnLQWpIHX8XAnfpw/1583399868/sites/default/files/inline-images/palanisamy6666333.jpg)
ஆனால் செல்லாத வாக்கைக் கொண்டு அ.தி.மு.க. ஜெயித்ததாக அறிவித்ததை ஏற்க முடியாது என்று தி.மு.க.வினர் எதிர்த்ததுடன் தீர்மானத்தில் கையெழுத்துப் போடவும் மறுத்தவர்கள் செல்லாத வாக்கை அ.தி.மு.க.விற்குச் சாதகமாக்கி வெற்றி பெற்றதாக அறிவித்தனர் என்று புகார் கூறினர்.
![local body election thoothukudi admk candidate win](http://image.nakkheeran.in/cdn/farfuture/_lvsGxXn7zG25yXXjQmOgL6xUsFUjxyoxqTf5YGmEVk/1583399905/sites/default/files/inline-images/palanisamy88883333.jpg)
நம்மிடம் பேசிய தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் முதலில் அவர்கள் பக்கம் 11 எண்ணிக்கை. எங்கள் தரப்பில் 8 மட்டுமே. வாக்கெடுப்பில் அவர்கள் தரப்பு கவுன்சிலர் ஒருவர் எங்களுக்கு வாக்களித்தார். எங்கள் பக்கம் 9 ஆனது. ஆனால் அவர்கள் பக்கமிருந்த 10 பேரில் ஒரு வாக்கு செல்லாத வாக்கானது. தேர்தல் அலுவலர் சரிசமம் என்று அறிவிக்காமல், அதை அ.தி.மு.க.விற்குச் சாதகமாக்கி வெற்றி பெற்றதாக அறிவித்ததைத் தான் நாங்கள் ஆட்சேபித்து அவரிடமே புகாரைக் கொடுத்திருக்கிறோம் என்றார்.
பின்னர் கவுன்சிலர்களோடு வெளியேறிய தி.மு.க.வினர் எட்டயபுரம் சாலையில் ஒன்றியச் செயலாளர் முருகேசன் கோவில்பட்டி ஒன்றியச் செயலாளர் கருணாநிதி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.