"பெரியாரை தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பாஜக மல்லாக்கப் படுத்து எச்சிலை துப்புகின்றது.. திராவிட கொள்கைகளும், சித்தாங்களும் இல்லையேல் நாம் இல்லை." என பாஜகவையும், ஹெச்.ராஜாவையும் சரமாரியாக விளாசித்தள்ளியுள்ளார் நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ்.
அதிமுக. கூட்டணியில் தன்னுடைய முக்குலத்தோர் புலிப்படை உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றார் திருவாடனை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான நடிகர் கருணாஸ். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்து கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில், இரவினில் திருப்பத்தூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் கருணாஸோ, " பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை..! அண்ணா இல்லை என்றால் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் இல்லை.! இப்படித்தான் இருக்கின்றது நமது வரலாறு..! அப்படி இருக்கும் பொழுது இந்த மண்ணில் திராவிட கொள்கைகளையும் திராவிட இயக்கங்களையும் சுயமரியாதை கொள்கைகளையும், பொதுவுடமை கொள்கைகளையும் வளர்த்த, பெண்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளையும் பெற்று தந்த ஒரு மனிதனை அரசியலுக்காக பாஜக தரம் தாழ்ந்து பேசுவது மல்லாக்க படுத்து எச்சிலை துப்பிக் கொள்வதுபோல் இருக்கிறது.
சமீபகாலமாக தேசிய கட்சியான பாஜக இவ்வளவு தரம் தாழ்ந்து அரசியல் செய்ய வேண்டுமா.?" என பாஜகவினை விளாசியவர் தொடர்ந்து, "நான் அதிமுக கூட்டணியில் தான் இருக்கின்றேன். பாஜக கூட்டணியில் இல்லை. இன்னொன்று பாஜக கட்சியில் ஹெச்.ராஜான்னு ஒரு மனுசன் இருக்கிறார் அவரைத் தெரியுமா..? அவர் என்றைக்கும் நல்லது பேசியது கிடையாது. அவருடைய பேச்சை மக்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்." என தன் பங்கிற்கு ஹெச்.ராஜாவையும் தாக்கி பேசிவிட்டு வாக்குகள் சேகரித்து சென்றார் அவர்.