சென்னை பட்டாளத்தில் உள்ள பூங்காவை இடிக்கவும், அங்குள்ள மரங்களை வெட்டவும் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மாநகராட்சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புளியந்தோப்பைச் சேர்ந்த ராமபூபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை பட்டாளம் மணிக்கூண்டு அருகே, 2000 அடி நீளமும், 40 அடி அகலமும் கொண்ட, 150 வருட பழமையான செல்வபதி செட்டியார் பூங்கா இருப்பதாகவும், இந்தப் பூங்காவில் 150 வருட பழமையான 60 மரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பூங்கா அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளதாகவும், அந்த குடியிருப்பில் இருப்பவர்களுக்கு வழி ஏற்படுத்த, தனியார் கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சி அதிகாரிகள் முறைகேடாக இந்தப் பூங்காவை இடிக்கவும், மரங்களை வெட்டவும் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே சென்னையில் அதிக அளவில் மரங்கள், பூங்காக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதே நிலைமை நீடித்தால் சென்னையில் மரங்களும், பூங்காக்களும் இல்லாத நிலை ஏற்படும். இந்தப் பூங்காவை இடிப்பது தொடர்பாக, மரங்களை வெட்ட கூடாது எனக் கோரி மாநகராட்சியிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மரங்களை வெட்டவும், பூங்காவை அழிக்கவும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஜனவரி 7- ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.