உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினருக்காக வாக்கு சேகரிக்க வந்த நடிகர் கருணாஸ் வாக்கு சேகரிப்பின் போது, "இந்த ஆள் சரியில்லைன்னா சொல்லுங்க..! நடுரோட்டில் வைத்து உங்களுக்காக உதைக்கின்றேன்." என வேட்பாளரை பயமுறுத்தியது பதட்டத்தை உருவாக்கியுள்ளது.
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ் ஆளும் அதிமுகவிற்காக பல்வேறு இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றார்.
இதில் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பகுதிகளில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிள்ளையார்பட்டியில் பிரச்சாரப் பயணத்தை தொடங்கியவர் நெடுமரம், சிறுகூடல்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் வாக்குகளை சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது, "எதிர்க்கட்சி தரும் ரூ. 500, ரூ. 2000 பணம் உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும் என்றால் கூறுங்கள், உடனே நான் அரை ஏக்கர் நிலத்தை உங்களுக்கு எழுதி வைக்கிறேன். 2000 ரூபாய் பணத்திற்காக உங்களது உரிமைகளை அடமானம் வைக்க வேண்டாம்.
உங்களுக்குத் தேவையான அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தரக்கூடிய தகுதியுடையவர்கள் அதிமுக வேட்பாளர்கள் மட்டுமே, உங்கள் வாக்குகளை அதிமுகவிற்கு செலுத்தினால், அது உரிமையாக மாறும். மாற்று கட்சிகளுக்கு செலுத்தினால் அது அரசியல் ஆக மாறும்." என்றவர், "தகுதியுடைய வேட்பாளருக்குத் தான் பிரச்சாரம் செய்ய வருகின்றேன். தவறான ஆட்களை ஒரு போதும் அடையாளப்படுத்த மாட்டேன். அப்படி ஒரு வேளை இந்த ஆள் சரியில்லைன்னா சொல்லுங்க.. உங்களுக்காக அவரை நடுரோட்டில் வைத்து உதைப்பேன்." என பேச்சை மாற்ற அருகிலிருந்த வேட்பாளரின் முகமோ வியர்க்க தொடங்கியது. வேட்பாளரை பயமுறுத்திய பிரச்சார பேச்சு வைரலாக ஏனைய இடங்களில் பிரச்சாரத்திற்கு நடிகர் கருணாஸை தவிர்த்து வருகின்றனர் என்பதே நிதர்சனம்.