அரசு மருத்துவர்கள் போராட்டத்தை விலக்கி கொண்டதையடுத்து பணி முறிவு நடவடிக்கையாக பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கையை திரும்ப பெறுவதாக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கையில் தெரித்துள்ளார்.
ஏழு நாட்களாக தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த நிலையில் முதல்வர் வேண்டுகோளை ஏற்று இன்று தற்காலிகமாக வாபஸ் வாங்குவதாக சென்னை அரசு மருத்துவமனை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்திருந்தார்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏழு நாட்களாக அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தற்போது 8-வது நாளான இன்று காலை போராட்டம் தொடங்கிய நிலையில் இன்று காலை தற்காலிகமாக போராட்டதை கைவிடுவதாக சென்னை அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் தெரிவித்துள்ளார்.
எங்களை கடவுளுக்கு இணையாக மக்கள் பார்ப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தை விலக்கி கொண்டதையடுத்து பணி முறிவு நடவடிக்கையாக பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கையை திரும்ப பெறுவதாக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கையில் தெரித்துள்ளார். மேலும் மருத்துவர்களின் நியாமான கோரிக்கைகளை அரசு பேசி உரிய தீர்வு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
அதேபோல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மருத்துவமனை பாதுக்காப்பு சட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் ஆர்எம்ஒ திருநாவுக்கரசு போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.