தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஒவ்வொரு வருடமும் தமிழ் மொழி இலக்கியம் மற்றும் கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது ! தமிழர் திருநாளை முன்னிட்டு தை 1 -ந்தேதி இந்த விருதுகளை தமிழக அரசு வழங்கும். இதற்கான அறிவிப்பை ஜனவரி 10-ந்தேதிக்குள் அறிவிப்பார்கள். ஆனால், தை முதல் தேதிக்கு முன்பான போகி பண்டிகையான இன்று வரை இதற்கான அறிவிப்பை செய்யவில்லை. இதனால் அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் தமிழறிஞர்கள்.
" திருவள்ளுவர் பெயரில் சுமார் 42 ஆண்டுகளாக தொடர்ந்து விருது வழங்கப் பட்டு வருகிறது. அதே போல, பாரதியார் பெயரில் 1997 முதல் வழங்கப்பட்டு வருகின்றது.
பாரதிதாசன் விருது 1978-லும், திரு.வி.க . பெயரில் 1979-லிலும் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது 2000-லிலும் காமராசர் விருது 2006-லிலும், அறிஞர் அண்ணா விருது 2006-லிலும் அறிவிக்கப்பட்டு அவ்வாண்டிலிருந்து தொடர்ந்து விருதுகள வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தாண்டு இந்த நிமிடம் வரை அறிவிப்பு வரவில்லை. இவ்வளவுதான் தமிழ் மொழி மீது இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கும் அக்கறை . ஆட்சியாளர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் கிளம்புவதால் விருது அறிவிப்பை மறந்து போனார்களோ ? " என கொந்தளிக்கிறார்கள் தமிழறிஞர்கள்.