கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது பாளையங்கோட்டை. இந்த ஊராட்சியின் ஒதுக்குப்புறமான கானூர் செல்லும் வழியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று இயங்கிவருகிறது. இந்தக் கடையில் நேற்று முன்தினம் (30.07.2021) இரவு மது பாட்டில்கள் விற்பனையை முடித்துக்கொண்டு அதன் ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், இரவு சுமார் 2 மணி அளவில் சோழத்தரம் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டாஸ்மாக் கடையை தற்செயலாக டார்ச் லைட் அடித்து பார்வையிட்டபோது கடையின் மேற்குப் பகுதியில் உள்ள சுவற்றில் துளையிடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணனுக்கு போலீசார் தகவல் அளித்ததனர்.
அதன் பேரில் டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கடைக்கு விரைந்து வந்தனர். அதே நேரம் ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி, சோழத்தரம் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் கூப்பர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு தடயங்களை சேகரித்தனர். கடை மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் கடையை ஆய்வு செய்தபிறகு சோழத்தரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், 18 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் மதிப்பு சுமார் 95 ஆயிரம் ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர். இதேபோன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது டாஸ்மாக் கடைகளின் சுவரை துளையிட்டுக் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.