புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ளது அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம். இங்கு புதுச்சேரி மட்டுமின்றி தமிழக பகுதியான விழுப்புரம், கடலூர், திண்டிவனம் போன்ற பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள பயிர்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இது வேர்க்கடலை சீசன் என்பதால் வேர்க்கடலை மூட்டைகள் ஏராளமாக குவியத் தொடங்கி உள்ளன.
அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ரூபாய் 1500 க்கு விற்ற ஒரு மூட்டை இந்த ஆண்டு அதிகபட்சமாக 2500 க்கும் குறைந்தபட்சமாக 1900 க்கும் விற்பனையாகிறது. விவசாயிகள் விற்பனை செய்ததை தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகமாக கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பருவமழை பெய்யாததால் விளைச்சல் சற்று குறைவுதான் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அதேசமயம் குறைவான விளைச்சலை ஈடு செய்யும் விதமாக கமிட்டியில் நியாயமான விலை கிடைக்கிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால் விவசாயிகள் தங்களது பொருட்களை வந்து விற்பனை செய்வதில் தயக்கம் காட்டியுள்ளனர். தேர்தல் முடிந்த நிலையில் விவசாயிகள் பெருமளவில் தங்கள் பொருட்களை கொண்டு வந்து குவிக்க தொடங்கியுள்ளனர்.