திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 34 மாவட்ட கவுன்சிலர்களில் 24 கவுன்சிலர்களை திமுகவும், காங்கிரஸ் கட்சி ஒரு கவுன்சிலரையும் பெற்றது. அதிமுக 9 கவுன்சிலர் இடங்களை பிடித்துள்ளது.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தேர்தல், மறைமுக தேர்தலாக நடைபெற்றதில் திமுகவை சேர்ந்த பார்வதிசீனுவான் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அதன்பின் நடந்த துணை தலைவர் தேர்தலில் பாரதிராமஜெயம் என்கிற திமுக கவுன்சிலரே வெற்றி பெற்றுள்ளார்.
திருவண்ணாமலை ஊராட்சி குழு சேர்மன் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது என்பதால் அதில் ஒரு பெண்மணி அமர்த்தப்படுவார், துணை சேர்மனாக ஒரு ஆண் தேர்வு செய்யப்படுவார் என திமுகவினர் உட்பட பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் துணை சேர்மனாகவும் ஒரு பெண்மணியே தேர்வு செய்யப்பட்டுயிருப்பது அனைத்து தரப்பினரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுப்பற்றி திமுக நிர்வாகிகள் வட்டாரத்தில் கேட்டபோது, சேர்மனாக பாரதிராமஜெயத்தை தான் தேர்வு செய்வதாக இருந்தது. மாவட்டத்தின் மேற்கு பகுதியை சேர்ந்தவர்களே சேர்மனாக இருக்கிறார்கள். வடக்கு பகுதிக்கு பிரநிதித்துவம் தரவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. அதனால் கட்சி தற்போது வலு குறைந்துள்ள வந்தவாசி பகுதியில் இருந்து தேர்வு செய்ய வேண்டும் என்பதால் பார்வதியை தேர்வு செய்தனர்.
பாரதிராமஜெயம், தீவிர களப்போராளி, மகளிரணியில் இருந்து தற்போது மாவட்ட கமிட்டியில் இருக்கும் நிர்வாகி என்பதால் துணை சேர்மனாக அவரை நிறுத்தியது. இருவரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.