தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களில் ஒன்று குட்கா மற்றும் பான் மசாலா போன்றவைகள். ஆனால் தமிழகம் முழுக்க இந்த போதை பொருள் சப்ளை மற்றும் விற்பனை என்பது ஜோராக நடக்கிறது. அரசியல்வாதிகள் போலீஸ் அதிகாரிகள் துணையோடு இந்த தொழில் நடந்து வருகிறது.
இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வட்டாட்சியர் சிவசங்கரன் உணவு பாதுகாப்பு அலுவலர் குழந்தைவேல் மற்றும் காவல்துறையினர் இணைந்து தெப்பக்குளம் வீதியில் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கு வாடகைக்கு குடோன்களை பிடித்து அதில் குட்கா, பான் மசாலாவை மூட்டை மூட்டைகளாக வடமாநில கும்பல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் ஐந்து குடோன்களை கண்டறிந்துள்ளனர் அதிகாரிகள். இதில் மட்டும் பல கோடி ரூபாய் குட்கா, பான் மசாலா பொருள்கள் இருந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தடைசெய்யப்பட்ட பல பொருள்களை கைப்பற்றியுள்ளனர். இந்த குடோன்களை வாடகைக்கு எடுத்து தொழில் செய்யும் வடமாநில தொழிலதிபர்கள் பற்றி அதிகாரிகள் எந்த விபரமும் கூறவில்லை.
ஆனால் ரெய்டு நடத்தி சில பொருட்களை கைப்பற்றினோம் என மட்டும் கணக்கு காட்டியுள்ளார்கள். இந்த கோபிசெட்டிபாளையம் அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த ஊர். அமைச்சரின் ஊரிலேயே தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் ஒரு தொழிற்சாலை போல் நடந்து வந்துள்ளது என்கிறார்கள் கோபிசெட்டிப்பாளைய மக்கள். மேலும் ஈரோடு மாவட்டத்திற்கு இங்கிருந்துதான் போதைப்பொருட்களை வடமாநில கும்பல் சப்ளை செய்துள்ளது என்றும் இது அமைச்சர் ஊர் என்பதால் எந்த ஆபத்தும் வராது என்று அவர்கள் கருதியிருக்கலாம் என்றும் ஊர் மக்கள் தெரிவித்தனர். மேலும் இதற்கு யார் யாரெல்லாம் உடந்தை என்பது தெரியப் போவது இல்லை என கவலையுடன் தெரிவித்தனர் அப்பகுதி மக்கள்.