பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு, கடுமையான தண்டனைகள் கொண்டுவந்தும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை. குறிப்பாக ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ரயில்வே டிக்கெட் பரிசோதகர்களால் அடிக்கடி பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அதில் பல சம்பவம் வெளியில் தெரிவதில்லை. ஒன்று, இரண்டு சம்பவங்கள் மட்டுமே வெளியே தெரியவருகின்றது.
சென்னை கொளத்தூரை சேர்ந்த லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 22 வயதான இவர் கோவையில் பிரபல கல்லூரியில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்துவருகிறார். கரோனா தொற்று காரணமாக விடுதியை காலி செய்ய அறிவுருத்தப்பட்டிருந்ததால். கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி விடுதியை காலி செய்துவிட்டு சென்னைக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து சென்னைக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். விடியற்காலை சென்னையை நெருங்கிகொண்டிருந்த வேளையில், இயற்கை உபாதை கழிக்க ரயில் கழிவறைக்கு சென்றபோது, ரயில் கழிவறை ஜன்னல் கண்ணாடியில் தன்னை யாரோ படம்பிடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சாமர்த்தியமாக ஆடைகளை சரிசெய்து கொண்டு வேகமாக வெளியே வந்து, படம்பிடித்த நபரை பிடித்தார்.
பிறகு சக பயணிகள் உதவியுடன் ரயில்வே போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் அவர் அதே ரயிலில் டிக்கெட் பரிசோதகர் என்பதும் அவர் சேலம் மாவட்டம், சூரமங்கலத்தை சேர்ந்த 26 வயதான மேகநாதன் என்பதும் தெரியவந்தது. மேகநாதனின் மொபைல் போனை பறிமுதல் செய்து பார்த்ததில் மாணவி கழிவறையில் இருந்தபோது ரயில் படிகெட்டு வழியில் நின்று வீடியோ எடுக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் பல பெண்களை ஆபாச படமெடுத்து வாட்சாப்பில் அனுப்பியிருந்ததும் மேலும் இதற்காக தனியாக ஆபாச வாட்சாப் குரூப்பை நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. உடனே மாணவியின் புகாரின் பெயரில் பெரம்பூர் ரயில்வே போலீசாரின் தகவலின்படி அரக்கோணம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி டிக்கெட் பரிசோதகர் மேகநாதனை கைது செய்தார்.