Skip to main content

அப்துல்கலாம் லயன்ஸ் சங்கத்தின் உதவி! நக்கீரனுக்கு நன்றி சொன்ன மக்கள்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

l


ஊரடங்கினால் வாழ்வாதாரம் முடங்கிப்போன குடுகுடுப்பைக்காரர்களுக்கு திமுகவினர் உதவி செய்ததையும், அதன்பின்னர் ’நமக்கு நாமே’ என்று தங்களுக்குள்ளாகவே உதவிக்கொண்டதையும் நக்கீரனில் செய்தி வெளியிட்டோம். இந்த செய்தி்யை படித்துவிட்டு, அப்துல்கலாம் லயன்ஸ் சங்கத்தினர் 53 குடுகுடுப்பைக்காரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மளிகை பொருட்களை அளித்துள்ளனர்.


காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கத்தில் 53 கணிக்கர் இன குடும்பங்கள்  100 வருடங்களுக்கு மேலாக பரம்பரை, பரம்பரையாக வசித்து வருகின்றார்கள்.  தற்போது 53 குடும்பத்தை சேர்ந்த 192 பேரும் இப்பகுதியில் கூட்டாக வசித்து வருகின்றார்கள். கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், ஊர் ஊராகச் சுற்றிவருவதுதான் தொழில் என்றான இவர்களின் வாழ்வாதாரம் ஆடிப்போய்விட்டது. யாரும் இவர்களை கண்டுகொள்ளாத நிலையில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியினர் மூலமாக தமிழகம் முழுவதும் உதவி வருவதை டி.வி.யில் பார்த்ததும் இவர்களுக்கு ஒரு தெம்பு வந்துவிட்டது.   

 

 

l

 

தமிழ்நாடு கணிக்கர் இன சமூக நலச் சங்கத்தின் மாவட்ட தலைவரான குப்பன், தி.மு.க. பிரமுகரும் வழக்கறிஞருமான சசிகுமாரை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். சசிகுமார் மூலமாக காஞ்சிபுரம் மாவட்ட திமுக பிரமுகர் பி.எம்.குமாரை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். குப்பன் மூலமாக, குடுகுடுப்பைக்காரர்களின் நிலையை அறிந்து, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமாரிடம் முறையிட்டுள்ளார் குமார். அதோடு நில்லாமல், மாதவன் என்பவரின் மூலமாக காஞ்சிபுரம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்திடம் பேசி, 53 குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி கிடைக்க முதற்கட்டமாக ஏற்பாடு செய்துள்ளார். அடுத்து, திமுக மூலமாக ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான காய்கறிகள் வாங்கி கொடுத்திருக்கிறார்.  


கேட்பாரற்று கிடந்தவர்களுக்கு இந்த உதவி பெரிய உதவி என்றாலும், அது தங்கள் வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை. அதனால், 53 குடும்பத்தினர் கூடி பேசி, ஒரு முடிவெடுத்தனர். அதன்படி, ஒவ்வொரு வீட்டினரும் தங்களிடம்  இருந்த ஒரு கிராம், ரெண்டு கிராம், அரை கிராம் தங்க நகைகளை கொண்டு வந்து தலைவர் குப்பனிடம் கொடுத்தனர். மொத்தமாக சேர்ந்ததில் 3 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்தன. அந்த நகைகளை ஒரு லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்தனர். ஒரு லட்சத்து 75 ரூபாய்  பணத்தில் 53 குடும்பங்களுக்கும் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிப் பிரித்து எடுத்துக்கொண்டனர்.  

 

 

o

 

இதை அறிந்த மு.க.ஸ்டாலின், குப்பனை தொடர்புகொண்டு வாழ்த்து சொன்னார். நக்கீரன் இதழிலும், நக்கீரன் இணையத்திலும் வெளிவந்த இந்த செய்தியை படித்துவிட்டு, காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றிய கழக பொறியாளர் அணி துணை அமைப்பாளராக பணியாற்றி வரும் கே. கார்த்திகேயன்,  அப்துல்கலாம் லயன்ஸ் சார்பாக கணிகர் இன மக்களுக்கு உதவ முன்வந்தார்.  

உப்பு, புளி, மிளகாய், சீரகம், கடுகு உள்ளிட்ட சமையலுக்கு தேவையான சுமார் 25வகையான பொருட்களை 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. SSR.சசிக்குமார், M.மகேந்திரன், அப்துல்கலாம் லயன்ஸ் சங்கம் PMJF.Ln.T.இராமலிங்கம், Ln.K.கார்த்திகேயன் - வட்டார தலைவர் மற்றும் Ln.R.ஹரிஷ் ஆகியோர் இணைந்து இந்த  மளிகை நிவாரண பொருட்களை வழங்கினர். நக்கீரன் மூலமாக இந்த உதவி கிடைக்கப்பெற்றதை அடுத்து,  53 கணிக்கர் இன குடும்பத்தினரும் நக்கீரனுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்