புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஊராட்சி போரம் கிராமத்தில் திருமணமாகி 3 மாதங்களில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த தன் கணவரை தலையில் அடித்துக் கொன்று கிணற்றில் வீசிவிட்டு கணவரை காணவில்லை என்று நாடகமாடிய மனைவிக்கு ஆயுள் மற்றும் 7 ஆண்டுகள் சிறை.
புதுக்கோட்டை மாவட்டம் போரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (30) இவருக்கும் கறம்பக்குடி வட்டம் மாங்கான் கொல்லப்பட்டி கணேசன் மகள் நந்தினி என்ற பெண்ணுக்கும் திருமணமானது. நந்தினி திருமணத்திற்கு முன்பு திருப்பூரில் வேலை செய்த இடத்தில் பழக்கமான ஒரு இளைஞருடனான நட்பு தொடர்ந்துள்ளதால் பாண்டித்துரைக்கும் நந்தினிக்கும் இடையே தினசரி சண்டை நடந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பர் 20 ந் தேதி வீட்டிலிருந்து சென்ற தன் மகனைக் காணவில்லை என்று பாண்டித்துரையின் தாயார் மீனாட்சி ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அன்றே விசாரணையை தொடங்கிய போலீசாரால் பாண்டித்துரையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தான் 12 நாட்களுக்குப் பிறகு பாண்டித்துரையின் வீட்டின் அருகே உள்ள கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதால் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் மீட்டு பார்த்தபோது, சடலமாக மிதந்தது 12 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பாண்டித்துரையின் உடல் என்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அவரின் மனைவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தன் கணவரை தலையில் தாக்கி கை, கால்களை கட்டி கிணற்றில் தூக்கி வீசினேன் என்று நந்தினி கூறியுள்ளார். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மாவட்ட அரசு வழக்கறிஞர் சு.வெங்கடேசன் வழக்கில் ஆஜரானார். போலீசார் வழக்கு சம்மந்தமான ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தனர்.
இந்த நிலையில் புதன் கிழமை இந்த வழக்கில் நீதிபதி அப்துல் காதர் வழங்கிய தீர்ப்பில், 302 ஐபிசி-யின் படி ஆயுள் தண்டனையும் ரூ.500 அபராதமும், ஐபிசி 201 ன் படி 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். திருமணத்தை மீறிய உறவுக்குத் தடையாக இருந்த கணவரை திருமணமான 3 மாதத்திலேயே கொலை செய்த மனைவிக்கு ஆயுள் மற்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.