தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டம் பெரிய கொழுவாரி என்ற ஊரில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திறந்து வைத்து பல்வேறு நலத்திட்டங்களை வரும் ஏப்ரல் 6.ம் தேதி வழங்குகிறார். மேலும், அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார்.
அவரை வரவேற்பதற்காக மாவட்டச் செயலாளர் புகழேந்தி தலைமையில், அமைச்சர் பொன்முடி முன்னிலையில், விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசித்தனர். அதேபோன்று முதல்வர் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று வடக்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் பாண்டியன், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் செல்வகுமார் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வில் மூன்று மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பணிகள் குறித்தும் வழக்குகள் எந்த நிலையில் உள்ளன, மாவட்ட அளவில் பதிவு செய்யப்பட்ட முடிவுற்ற வழக்குகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.