திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு இதுகுறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மாணவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமுக வலைத்தள பதிவில், “திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், சாதிய நச்சால் ஏற்பட்ட தாக்குதலில் பாதிப்புக்குள்ளான பள்ளி சிறுவன் மற்றும் சிறுமிக்கு அரசு சார்பில் உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததோடு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். தொடர் சிகிச்சையின் பயனாக குணமடைந்துள்ள அந்த சிறார்களையும், அவர்களது குடும்பத்தாரையும் நெல்லையில் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம். அவர்களுக்கு சிறப்பாக மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்களை பாராட்டினோம்.
மேலும், அந்த சிறாரின் குடும்பத்தாருக்கு, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வீடு வழங்குவதற்கான ஒதுக்கீட்டு ஆணையை அளித்தோம். அச்சிறாரை நெல்லையில் உள்ள பள்ளியில் சேர்ப்பதற்கான மாறுதல் ஆணையையும், அவர்களின் தாயாருக்கு நெல்லையில் உள்ள சத்துணவு மையத்தில் பணிபுரிவதற்கான பணி மாறுதல் ஆணையையும் வழங்கினோம். அவர்களின் குடும்பத்துக்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும். சாதிய ஏற்றத்தாழ்வு - ஆதிக்கம் ஒழித்து சமத்துவ சமுதாயம் அமைக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.