அதிமுக முன்னாள் தலைவர்கள் பற்றிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்த அது கூட்டணி முறிவு வரை சென்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.
இந்த முடிவை அதிமுக தொண்டர்கள் வரவேற்றுக் கொண்டாடினர். அதேபோல பாஜக தரப்பிலும் தொண்டர்கள் வரவேற்று இருந்தனர். அதிமுக மற்றும் பாஜக தலைமைகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. இதனால் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது என்ற பேச்சும் எழுந்தது.
இருதரப்பு தலைமைகளும் கூட்டணி முறிவுக்கு பிறகு அது குறித்து வாய் திறக்காத நிலையில், அண்மையில் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, ''தொண்டர்களின் உணர்வை மதித்தே கூட்டணி முறிக்கப்பட்டது. இந்த தேர்தல் மட்டுமல்லாது 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கண்டிப்பாக கூட்டணி இருக்காது'' என தெளிவுபடுத்தி இருந்தார்.
மறுபுறம் பாஜக தலைமை கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை எங்களுக்கு வேண்டிய அறிவுறுத்தல்களை கொடுக்கும் என்றே தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கோவையில் இருக்கும் அண்ணாமலை இன்று மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு டெல்லியில் தேசியத் தலைமைகளை சந்திக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ''கூட்டணி சம்பந்தமாக பேச வேண்டிய நேரத்தில் அகில இந்திய தலைவர்கள் பேசுவார்கள். தனக்கு கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய பொறுப்பு இருக்கக்கூடிய நேரத்தில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது மட்டும்தான். ஒரு கருத்திற்கு எதிர் கருத்து சொல்லிக் கொண்டே இருந்தால் அதற்கு முடிவே இல்லாமல் போய்விடும். ஒரு கருத்தை நான் சொன்னதாக ஒருவர் கூறுகிறார்; அதனை இல்லை என்று ஒருவர் கூறுகிறார். நேரம் வரும்போது பேசுவோம். தூய்மை அரசியல் என்றாலே தோல்விகள் நிச்சயம். அதை தாண்டி தான் நிற்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.