தமிழகத்தில் 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளார். வரும் 22 ஆம் தேதி மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். இப்படி மதிப்பெண் பட்டியல் மாணவர்களைச் சென்றடைந்ததும் இங்குள்ள பொறியியல் கல்லூரி மற்றும் காலை கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளிலும் சேர்வதற்கான விண்ணப்பங்கள் தொடங்கும். வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களும் வரும் 31 ஆம் தேதிக்குள் வரும் என அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இந்த மாதம் 26 ஆம் தேதி துவங்கி அடுத்த மாதம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சேர்க்கைக்காக எல்லா கல்லூரிகளும் தயாராகலாம்'' என்றார்.
அப்பொழுது, கடந்த ஆட்சிக் காலத்தில் உங்கள் சொந்த மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம்.. எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப ''அதை அப்புறம் பார்த்துக்கலாம். நிதிநிலை அறிக்கையில் பாருங்க '' என அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.