வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சரியான குடிதண்ணீர் வசதியில்லை என தினம் தினம் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை சரிச்செய்ய முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்துக்கு வருகை தரும், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தேவையான தண்ணீரும் சரியாக வராததால் வாரத்துக்கு இரண்டு நாள் தான் தண்ணீர் தருகின்றனர். இதனால் இன்னும் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், இராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு பொது தெரு பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. இதுப்பற்றி பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. அதோடு, அந்த பகுதி சாலைகளும் குண்டு குழியுமாகவே இருந்துள்ளன. தெருவிளக்கு எரியவில்லை. இதுப்பற்றி மக்கள் முறையிட்டும் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லையாம்.
கடந்த ஓருவருடமாக குடிதண்ணீர் பிரச்சனை, சாலை பிரச்சனை, தெருவிளக்கு எரியாததால் இருட்டில் பயணம் செய்த மக்கள் அதிருப்தியாகி, ஆத்திரமடைந்தனர். ஜீலை 5ந்தேதி காலை 11 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பலர் குழுமி வந்து பேரூராட்சி அலுலவகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அதிர்ச்சியான அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர், மக்களிடம் மனு வாங்கிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறோம் என வாக்குறுதி தந்ததன் அடிப்படையில் இரண்டு மணி நேர முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த மனுக்காவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என ஏக்கத்துடன் மக்கள் சென்றுள்ளனர்.