சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் பொழிந்த அதீத கன மழையால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியது. தற்பொழுது படிப்படியாக மீண்டு வருகிறது.
மத்திய அரசிடம் தமிழக அரசு நிவாரண நிதி கோரியிருந்தது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்த சில கருத்துக்கள் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இதற்கு தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தொடர்ந்து நாளை நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் நேரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''தமிழக முதல்வர் நிவாரண உதவிகளை அறிவித்து கடந்த 10 நாட்களாக அனைத்து அமைச்சர்கள், அனைத்து மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என அத்தனை பேரும் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். இவர்கள் தேவை இல்லாமல் அரசியல் பேசி வருகிறார்கள். என்ன பாதிப்பு இருக்கிறது என்பதை பார்க்க மத்திய அமைச்சின் நிர்மலா சீதாராமன் வர இருக்கிறார். பாதிப்புகளை அவர் நேரில் ஆய்வு செய்த பின்பு உரிய நிதி கொடுப்பார்கள் என நம்புகிறோம்'' என்றார்.