கோவை அருகேயுள்ள மதுக்கரை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதியாகும். நேற்று (28 ஜன.) நள்ளிரவு சுமார் ஒருமணியளவில், குவாரி ஆஃபிஸ் காந்தி நகர் பகுதி தமிழன்னை வீதியில் வசிக்கும் அரசு போக்குவரத்து ஓட்டுநர் சீனிவாசன் என்பவருடைய வீட்டின் சுற்று சுவர்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, அவர்களின் நாயைக் கடித்துக் குதறியது.
இதைப் பார்த்து பதறிப்போன அவர்கள், உடனடியாக வனத்துறைக்குத் தகவல் கொடுக்க, சரியான நேரத்திற்கு வராமல் வழக்கம்போல் நேரம் கடந்தே வந்தனர். அதன்பின்னர், விடிந்தப் பிறகு உயிருக்குப் போராடும் நாயைக் காப்பாற்ற கால்நடை மருத்துவர்களை அழைத்துள்ளனர். அவர்களும் யாரும் வராததால் இறுதியில் அந்த நாய் இறந்து போனது.
இதனால் விரக்தி அடைந்த அந்தப் பகுதி மக்கள், இதற்கு சாலை மறியல் ஒன்றேதான் சரியான தீர்வு என்று முடிவு செய்தனர். இன்று வரை அந்த சிறுத்தை அந்தப் பகுதியில்தான் நடமாடி வருகிறது. ஆனால் அதை விரட்டும் வனத்துறையின் நடமாட்டத்தைத்தான் காணவில்லை. நேற்று ஆட்டைக் கடித்து, இன்று நாயைக் கடித்துள்ள சிறுத்தை, நாளை மனிதனைக் கடிக்கும். அதிலிருந்து நாமும் நம் பிள்ளைகளும் தப்பிக்க என்ன வழி என்று அந்தப் பகுதி மக்கள் யோசித்தனர்.
உடனே நேற்று மாலை மதுக்கரை குவாரி ஆஃபிஸ் அருகே கோவை, பாலக்காடு ரோட்டில் சாலை மறியல் செய்ய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்தனர். அதற்குள் தகவலறிந்து வந்த காவல்துறையும், எப்போதும் தாமதமாக வரும் வனத்துறையும் திரண்டு வந்த பெண்களைத் தடுத்து சமரசம் பேசியும், முடிவு எட்டப்படவில்லை
இறுதியில் இரண்டு நாட்களுக்குள் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிப்பதாக, மதுக்கரை வனத்துறையினர் மறியலை கைவிட வேண்டுக்கோள் விடுத்தனர். அவர்கள் வேண்டுகோளை ஏற்ற அந்தப் பகுதி பெண்கள், வேறு வழியின்றி மறியல் திட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், “சொல்லியபடி இரண்டு நாட்களுக்குள் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும், பிடிக்கவில்லை என்றால் மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம்” என்று பொதுமக்கள் உறுதிபடச் சொல்லிவிட்டு கலைந்தார்கள்.
“வனத்துறையினர் அவ்வப்போது பெயரளவில் ரோந்து வந்து செல்வார்கள். முதலில் ஆட்டைக் கடித்த சிறுத்தை, இப்போது நாயைக் கடித்துள்ளது. அடுத்து மனிதர்களைக் கடிக்கும் நிலை உருவாகும்.
அதற்குள் வனத்துறையினர் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள், குடியிருப்பு பகுதிகளுக்கு வராதபடி வனத்தைச் சுற்றி உயரமான காம்பவுண்ட் சுவர் கட்டி, கம்பி வேலிகள் அமைத்து, கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணிக்க வேண்டும்,” என்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு நாயைக் கடித்த சிறுத்தை, இன்னும் அங்கிருந்து போகாமல் அந்த மலையிலேயே சுற்றித் திரிகிறது. இதனால் இன்று இரவு என்ன செய்வது என்று தெரியாமல் அந்தப் பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.