இரண்டு நாட்களாக மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
இரண்டு நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறை தீயணைப்புத் துறையினர் என மொத்தம் 61 பேர் சிறுத்தை தேடுதல் வேட்டையில் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர்.
ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறுத்தை பதுங்கிருப்பதாக கூறப்படும் கூறை நாடு, வடக்கு சாலிய தெரு, மேல ஒத்த சரகு, கீழ ஒத்த சரகு உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் அடர்ந்த இடங்கள் மற்றும் புதர் பகுதிகளில் வலைகள் மட்டும் கயிறுகளுடன் தீவிரமாக வனத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். தற்போது 10 குழுக்களாக பிரிந்து சிறுத்தை தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.