தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை ஆய்வு செய்யச் சென்ற வனக்காப்பாளரை புதரில் மறைந்திருந்த சிறுத்தை தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டம் கம்பம் கோம்பை ரோடு பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றி வருவதாக வனத்துறைஇனக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஈஸ்வரன் என்பவரின் வீட்டுக்கு அருகில் உள்ள புதர் பகுதியில் சிறுத்தை மறைந்திருப்பதாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் அந்தப் பகுதியில் முகாமிட்டு சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதருக்குள் வனக்காப்பாளர் ஒருவர் ஆய்வு செய்து கொண்டிருந்த போது திடீரென மறைந்திருந்த சிறுத்தை தாக்கியது. பின்னர் அங்கிருந்து தப்பி மற்றொரு புதர் பகுதிக்குள் சென்றது. சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த வனக்காப்பாளர் ரகுபதி பாண்டியன் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.