விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் ரத்தினவேல் முருகன் என்ற பெயரில் ஒரு முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறும். அதன்படி கடந்த 10ஆம் தேதி தொடங்கி பங்குனி திருவிழா நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாள் திருவிழாவின் போதும் முருகனின் முன்பாக உள்ள வேலின் முனையில் எலுமிச்சம்பழம் குத்தி வைக்கப்படும்.
அப்படி குத்தப்பட்ட எலுமிச்சம் பழங்களை திருவிழாவின் இறுதி நாளான உத்திரத்தன்று இரவு பக்தர்கள் மத்தியில் கோயில் பூசாரி ஊர் முக்கியஸ்தர்கள் ஏலம் விடுவார்கள். இந்த எலுமிச்சம்பழத்தை ஏலமெடுத்து அதைவாங்கி சாப்பிடுவதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற எலுமிச்சம்பழம் ஏலம் விடும் திருவிழாவின் போது முருகனின் வேலில் குத்தப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள் கொண்டுவரப்பட்டன. அந்த 9 எலுமிச்சம் பழங்களையும் ஏலம் விட்டனர். இதில் முதல் நாள் குத்தி வைக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தின் விலை 13 ஆயிரத்து 500க்கும், ஏழாம் நாள் திருவிழாவின் போது குத்தி வைக்கப்பட்ட எழுமிச்சம்பழம் 15 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் ஏலம் போனது.
இந்த திருவிழாவில் கலந்துகொண்டு எலுமிச்சம்பழம் ஏலம் எடுப்பதற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பல ஆயிரக் கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர். இந்த விழாவில் மொத்தம் 69,100 ரூபாய்க்கு எலுமிச்சை பழங்கள் ஏலம் போனது.