Skip to main content

விபத்தினால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்! -கட்டாய ஹெல்மெட் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் மரணமடைய ஹெல்மெட் அணியாதது மட்டுமே காரணமல்ல, மோசமான சாலைகளும் ஒரு காரணம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 Bad roads are the cause of accident; Report on filing helmet case


கட்டாய ஹெல்மெட் சட்டத்தைக் கண்டிப்புடன் அமல்படுத்தக் கோரி  சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல  வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஐ. ஜி சாம்சன்  சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 2019 ஜனவரி முதல் அக்டோபர் வரை சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 47 லட்சத்து 87 ஆயிரத்து 812  வழக்குகள் பதிவு செய்ய பட்டுள்ளதாகவும், இக்காலகட்டத்தில்  ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி 3535 பேர் பலியாகியுள்ளதாகவும், ஹெல்மெட் அணிந்தும் விபத்தில் சிக்கியவர்களில் 347 பேர் பலியாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆட்டோக்களில் பக்கவாட்டு கண்ணாடி வைக்காதவர்கள் மீது  3,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 Bad roads are the cause of accident; Report on filing helmet case


விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், போக்குவரத்து விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

இதைப்  பதிவு செய்த  நீதிபதிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பலியாவதற்கு ஹெல்மெட் அணியாதது மட்டுமே காரணமல்ல எனவும், சாலையின் தரமும், சாலையை முறையாகப் பராமரிக்காததும்  காரணம்  எனத் தெரிவித்தனர். தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை இன்னும் முழுமையாக அமல்படுத்துவது குறித்தும், சாலைகளை மேம்படுத்துவது குறித்தும், குறிப்பாக சென்னையில் உள்ள முக்கியமான சாலைகளை முறையாகப் பராமரிப்பது  குறித்தும் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2020 ஜனவரி 9-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்