வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்தது. தற்போதைய நிலவரப்படி தீவிரப்புயலாக இருந்த 'மாண்டஸ்' புயலாக வலுவிழந்து நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ட்விட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ஒருவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் நாளைக்கு மழைக்கு விடுமுறை இருக்குமா எனக் கேட்க, அவருக்கு மாவட்ட ஆட்சியர் பதிலளித்தது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அந்த இளைஞர் 'சார் புயல் காரணமாக நமது மாவட்டத்தில் நாளை விடுமுறைக்கு வாய்ப்பிருக்குமா' எனக் கேட்ட நிலையில், அதற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதன் ரெட்டி, 'வணக்கம் கதிர். விருதுநகரில் புயலின் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், நாளை பள்ளி/கல்லூரிக்கு செல்ல உங்கள் சைக்கிளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்' எனத் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த இளைஞரும் 'நன்றி சார்' எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதையும் விடாமல் 'ராஜபாளையத்தில் மழை வருது சார். தேனிக்கு முன்னெச்சரிக்கையா லீவு விட்டு இருக்காங்க. நீங்களும் விடுங்க சார்' என கமெண்டுகளில் கெஞ்சி வருகின்றனர்.
Hi Kathir. Since the impact of a cyclone 🌀 in Virudhunagar is very less, keep your cycle 🚲 prepared to go to school/college tomorrow 👍🏻😊
— Meghanath Reddy J (@jmeghanathreddy) December 8, 2022