பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த மணற்கேணி செயலி தற்போது புதிய வடிவமெடுத்திருக்கிறது. அதாவது காணொளிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணியை இனி கணினித் திரை உட்பட பல பெரிய திரைகளிலும் இணையதளத்திலும் காணும் வகையில் மணற்கேணி இணையதளத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (22.02.2024) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் ஆர்,சுதன் ராமசாமி, மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
https://manarkeni.tnschools.gov.in என்ற மணற்கேணி இணையதளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரு மொழிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை பல பாடப்பொருள்களாக, வகுப்புகள் தாண்டி வகை பிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கங்களை கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் (எஸ்.சி.இ.ஆர்.டி) நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. இதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள காணொலிகள் பாடப்பொருள்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
6, 7, 8, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான அறிவியல், கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் முதற்கட்டமாக பாடப்பொருள்கள் காணொளியாக தரப்பட்டுள்ளன. அலைபேசியில் மணற்கேணி செயலியை ப்ளே ஸ்டோரில் இதுவரையிலும் 2,00,000 முறை இச்செயலி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது உருவாக்கப்பட்ட மணற்கேணி இணையதளம் வாயிலாக இன்னும் அதிகமானோரை இக்காணொளிகள் சென்று சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.